பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலங்களை மீளப்பெறுக! – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

Meiveli Media Team


இலங்கை – அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகிய இரண்டையும் உடனடியாக மீளப்பெற வேண்டும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால், நிறைவேற்று அதிகாரத்துக்கு கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பில் விரிவான அதிகாரங்கள் கிடைப்பதுடன், நீதித்துறை மேற்பார்வை மற்றும் அடிப்படை உரிமைகள் பலவீனமடையக்கூடும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள சங்கம், அதற்காக அரசியலமைப்புப் பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்யும் அல்லது நீதித்துறை மேற்பார்வையின்றி தனிநபர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சட்ட ஏற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கடந்தகால அனுபவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம்,  குறித்த சட்டம் நீண்டகாலத் தடுப்புக்காவலுக்கும் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புகளை அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம், அதனை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வரைவிலிருந்து கணிசமாக விலகிச் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மீண்டும் குறித்த குழுவின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டாய விளக்கமறியல், பிணை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள், நீதித்துறை அனுமதியின்றி தடுப்புக்காவலை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை சட்டமூலங்களில் காணப்படும் முக்கியமான கரிசனைக்குரிய விடயங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒரு தடவையில் மூன்று மாதங்கள் வரை நடமாட்டம் மற்றும் சங்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பித்தல், அமைப்புகளைத் தடை செய்வதற்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவுகள் மூலம் நீண்டகாலத் தடுப்புக்காவலை அனுமதித்தல் போன்ற ஏற்பாடுகளும் அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனச் சங்கம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, அமைதியான போராட்டங்கள் உள்ளிட்ட நியாயமான ஜனநாயகச் செயற்பாடுகளை அடக்குவதற்கும் இச்சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான விதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசியலமைப்புச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், இச்சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெறுவதுடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் முற்றாக நீக்க வேண்டும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">