திரைப்படத்துறை கலைஞர்கள் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களுக்கு இடையிலான சிறப்பு சந்திப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை உள்நாட்டு திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து கலைஞர்களின் எதிர்காலத்தையும், சினிமாவின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு “சினிமாவை ஒரு தொழில்துறையாக (An Industry) மாற்றுவதற்கான” சிறப்பு பிரேரணைத் திட்டம் இன்று (அக்டோபர் 26) கௌரவ புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரைப்படத்துறையின் முன்னணி சங்கங்களின் பிரதிநிதிகளும் மூத்த கலைஞர்களும் கலந்துகொண்டனர். திரைப்பட உப குழுவின் தலைவரும் மூத்த திரைப்பட இயக்குநருமான அனுருத்த ஜயசிங்க, இலங்கை கலை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பிமல் துஷ்மந்த, இலங்கை தொழில்முறை ஒப்பனை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் நயன் உஜித், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சலின் மனுரங்க, வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் யசஸ் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் பிரேமரத்ன தென்னகோன் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
சினிமாவின் கலாச்சார, கல்வி, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளை கலாச்சார அமைச்சு மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழும், அதன் “வணிக மற்றும் உற்பத்தித் தொழில்” பகுதியை கைத்தொழில் அமைச்சின் கீழும் கொண்டுவருவதற்கு ஏதுவாக சட்டக் கட்டமைப்பை உருவாக்குமாறு அனைத்து தொழில்முறை சங்கங்களும் முன்வைத்த யோசனையை அமைச்சர் பெரிதும் பாராட்டியதுடன், அதற்கு மிகவும் சாதகமான பதிலையும் அளித்தார்.
இதற்கமைய, கைத்தொழில் அமைச்சும் கலாச்சார அமைச்சும் இணைந்து இந்த பிரேரணைத் திட்டத்திற்கு அமைவாக மிக விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், திரைப்படத் துறையின் எதிர்காலத்திற்காக எவ்வித லாப நோக்கமுமின்றி தன்னார்வத்துடன் முன்வந்து தொழில்முறை சங்கங்கள் ஆற்றிவரும் இந்த அர்ப்பணிப்புமிக்க சேவையை அமைச்சர் சிறப்பாகப் பாராட்டி கெளரவித்தார்.


