அநுராதபுரம் புனித பூமியில் இரண்டு இந்து ஆலயங்கள் புனரமைக்கப்பட கூடாது: அரசாங்கத்திடம் தயாசிறி ஜயசேகர கோரிக்கை
Meiveli Media Team

இலங்கை – அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அங்குள்ள இரண்டு பழைமையான இந்து ஆலயங்கள் புனரமைக்கப்படவுள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக இந்தியாவினால் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படும் 700 கோடி ரூபா நிதி, குறித்த இந்து ஆலயங்களின் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி மற்றும் அதற்கான நடைமுறைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதுள்ள 28 சதுர கிலோமீற்றர் பரப்பளவை 38 சதுர கிலோமீற்றராக விரிவுபடுத்தும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இப்பகுதி அதிக கவனம் செலுத்த வேண்டிய வலயம், கவனம் செலுத்த வேண்டிய வலயம் மற்றும் பொதுவசதிகள் வலயம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிக கவனம் செலுத்த வேண்டிய வலயத்தில் புதிய வழிபாட்டிடங்கள் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தயாசிறி ஜயசேகர, அங்கு இரண்டு பழைமையான இந்து ஆலயங்களின் சிதைவுகள் காணப்படுவதாகவும், அவற்றில் வழிபாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அட்டமஸ்தானங்களின் மகாநாயக்க தேரர்கள் மத்தியில் குறித்த ஆலயங்கள் மீளக் கட்டியெழுப்பப்படுவது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை,பிற மதங்களுக்கு எதிரான இனவாதத்தைத் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர்இ அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி விவகாரத்தில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தொல்லியல் சின்னங்களை வர்த்தமானியில் அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர்இ அநுராதபுரத்தில் இராமர் ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், சங்கமித்தா மாவத்தை மற்றும் அனுலா மாவத்தை பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுவது குறித்தும், விகாரைகளுக்கு அப்பால் வீதியோரங்களில் அமைந்துள்ள புத்தர் சிலைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

