செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும்!
Meiveli Media Team

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்டுள்ள அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அறிக்கையின் 17ஆவது பக்கத்தில், சுகாதார விபத்து காரணமாகப் பலர் உயிரிழந்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிழக்கு மாகாண தொல்பொருள் குழுவில் ராஜ் சோமதேவ இணைக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது அறிக்கை தொடர்பில் சந்தேகங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இதற்கு முன்னரும் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் உள்நாட்டு விசாரணைகள் மாத்திரம் போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளார். சுமார் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல உடல்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் இனவாதமற்ற முறையில் செயற்படுவதை நிரூபிக்க வேண்டுமாயின், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

