செங்கடலில் 14 இந்தியர்கள் பயணித்த படகு மீது சவூதி தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் குற்றச்சாட்டு!
Meiveli Media Team

செங்கடலில் சுகார் தீவுக்கு அருகே 14 இந்தியர்கள் பயணித்த படகின் மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியதாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் ஹவுதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியாவின் தாக்குதலுக்கு இலக்கான படகில் இருந்த 14 இந்தியர்களையும் ஏமன் ஆயுதப் படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், செங்கடலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஹவுதி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், படகு மீதான தாக்குதல் தொடர்பான ஹவுதி அமைப்பின் குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

