பிரான்ஸில் சட்டவிரோதப் போராட்டங்களுக்குத் தடை – ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு!
Meiveli Media Team

பிரான்ஸில் எதிர்வரும் நாட்களில் சட்டவிரோதப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்போது, கடந்த வார இறுதியில் பிரான்ஸில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என மக்ரோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில்இ தேவைப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் மாற்றுப் பாதைகளில் நடத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முழுவதும் அதிகாரிகள் புதிய போராட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இதற்கமைய, லியோன் நகரில் நாளைய தினம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரான்ஸின் முக்கிய மாணவர் அமைப்பான UNEF, எதிர்வரும் சனிக்கிழமை பேரணிகளை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மறுபுறம், மஞ்சள் அங்கி இயக்கத்தினரும் மத்திய பாரிஸ் ஊடாகப் பேரணியொன்றை நடத்துவதற்கான திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் தொடரும் போராட்டச் சூழலுக்கு மத்தியில், அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

