இலங்கையை சூழ குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கம்: 100 மி.மீ தாண்டிய கனமழைக்கு வாய்ப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையை சூழ நிலவும் வளிமண்டலக் கலக்கநிலை காரணமாக, அடுத்த சில மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டுப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ், தற்போது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அயன மண்டலங்களுக்கு இடையிலான இணைவு மண்டலம் (Intertropical Convergence Zone) மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான காலப்பகுதிகளில் வளிமண்டலக் கலக்கங்கள், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என்பதுடன், பெரும்பாலான பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரும் நவம்பர் 23 ஆம் திகதி வங்காள விரிகுடா கடற்பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் திணைக்களம் கண்காணித்து வருகின்றது.
தற்போது நிலவும் இந்தச் சீரற்ற வானிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதால், பொதுமக்கள் அவ்வப்போது வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

