அரசாங்கம் மிகவும் வலுவாகச் செயற்படுகிறது: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய அரசாங்கம் மிகவும் பலமாகவும் வலுவாகவும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைத் தலைவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் வீணான பேச்சுக்களுக்கு அரசாங்கம் தடைபோடவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய மக்கள் சக்திக்கும் (NPP) மக்கள் விடுதலை முன்னணிக்கும் (JVP) இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை எனத் தெளிவுபடுத்திய அவர், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியைத் தேசிய தலைவர் டில்வின் சில்வாவும், நாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவும் இணைந்து ஒரு குடும்பமாக, ஒற்றுமையாக வழிநடத்துகிறார்கள் என்றும், எனவே கட்சியில் எந்தவிதமான பிளவுகளும் பிணக்குகளும் கிடையாது என்றும் உறுதிப்படுத்தினார்.
மேலும், நாளுக்கு நாள் அரசாங்கத்திற்குச் சர்வதேச நாடுகளின் ஆதரவு பெருமளவில் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் சிவராசா அனோஜன் அவர்களின் மரண தண்டனையிலிருந்தான விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச மட்டத்தில் நாட்டிற்குரிய அபிமானமும், அரசாங்கத்தின் மீது வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தலைவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பெருமளவிலான மக்கள் கூட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில், உண்மையான ஆட்சியை நாட்டிற்குரிய மக்களே கொண்டு வந்ததாகவும், லட்சக்கணக்கான மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகத் திரள்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

