பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய ஒடுக்குமுறைச் சட்டமா? – பொதுஜன பெரமுன கேள்வி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது, சட்டரீதியான சான்றுகளைப் பெறுவதையும் பொலிஸாரிடம் மேலதிக அதிகாரங்களை வழங்குவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், இது அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டமாக எதிர்ப்புகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இதனைத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான பொய் வாக்குறுதி, நிலக்கரி கொள்வனவு தொடர்பான பிரச்சினை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் ஏற்கனவே அதிருப்தியடைந்துள்ளனர் என்றும், எனவே வெளிப்படையான அல்லது தெளிவான முறையில் அரசாங்கம் முன்னெடுக்க முனையும் இச்சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசுவது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக ரீதியில் வாக்களித்து, ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்த இலங்கை மக்களின் சட்டரீதியான உரிமைகள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வருகின்றன. சித்திரவதைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், பொலிஸாரின் அதிகாரங்களை நீதித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் இவ்வாறான சட்டங்கள் தடையாக அமையும் அபாயம் காணப்படுகிறது.
இந்த அரசாங்கத்திற்குத் தேவையான எதிர்ப்புரட்சிகளும், நாட்டின் உள்நாட்டுச் சூழல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு வாக்களித்த மக்கள், இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.
அரசியல் தரப்பினரின் எதிர்ப்புப் போராட்டங்களைப் பார்க்கும்போது, ‘பச்சைத் தொப்பிகள்’ (ஐக்கிய தேசியக் கட்சி) நீண்டகாலமாகச் சட்டம் இயற்றி அடக்குமுறையை முன்னெடுத்ததாக வரலாறு உள்ளது.
ஆனால், தற்போது புதிய போர்வையில் வந்துள்ள அரசாங்கமும் அதேபோன்று தவறான வழியிலேயே செல்ல முற்படுகிறது.
நாம் சர்வதேச ரீதியாக பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில், இந்தச் சட்டங்கள் எவருக்கும் பொருந்தாது என்று கருத முடியாது.
இந்தச் சட்டங்களின் மூலமாக இணையவழி குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்ட நடைமுறைகள் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விசாரணை நிறுவனங்கள் அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், புதிய சட்ட மூலங்கள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், அதற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் பரிசீலித்து, எதிர்ப்புகளை ஒடுக்கும் சட்டமூலங்களை நீக்க வேண்டும் என்றும், இது குறித்துச் சட்ட நிபுணர்களிடம் முறையான விளக்கங்களைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அரசாங்கத்தைச் விமர்சிப்பவர்களையும், அப்பாவி மக்களையும் ஒடுக்குவதற்குப் புதிய சட்டங்கள் பயன்படுத்தப்படலாம். நிலக்கரி விவகாரம் மற்றும் மின்சாரக் கட்டணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் அரசாங்கம், இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் மக்களின் குரலை ஒடுக்க முனைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

