ஜனாதிபதிக்கு எதிராக ‘மஹசோன் பிதேனிய’ சடங்கு: ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் விசேட வழிபாடு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுபவர்களை அகற்றி நாட்டில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் நோக்கிலும் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் விசேட சடங்கு மற்றும் வழிபாடு ஒன்று நேற்று இரவு (20) முன்னெடுக்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய சமந்தபத்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிக்குகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களான பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாட்டிற்கும் மக்களுக்கும் அநீதி இழைப்பதாகக் கருதப்படுபவர்களைக் குறிவைத்துச் செயற்படுவதற்காக மாத்தறையிலிருந்து விசேடமாக மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் நேரடி அறிவுறுத்தல்களுடன் “மஹசோன் பிதேனிய” எனப்படும் பாரம்பரிய சிறப்புச் சடங்கு இதன்போது நடத்தப்பட்டது.

நாட்டின் தற்போதைய அராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்டு, நீதியை நிலைநாட்டுவதற்காக இயற்கையின் சக்திகளிடம் நாட்டை ஒப்படைக்கும் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இந்நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.