இந்துக் கல்லூரி கொழும்பு “முத்தமிழ் விழா 2026” இனிதே நிறைவு: பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனுக்கு “இந்துவின் வித்தகக் குரிசில்” விருது வழங்கி கௌரவம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி சுதாகர் அவர்களின் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல், தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. வரவேற்புரை, வரவேற்பு நடனம் மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின.

நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் வரலாற்றில் முதன்முறையாக “இந்துவின் வித்தகக் குரிசில்” எனும் சிறப்பு விருது அறிமுகப்படுத்தப்பட்டு, வாழ்நாள் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது ஏற்புரையும் இடம்பெற்றது.
இவ்விழாவில் பேரானைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அத்துடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு. சு. முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்.

மேலும், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திருமதி. அபிராமி கைலாசபிள்ளை, முன்னாள் அதிபர் கலாநிதி. த. முத்துக்குமாரசாமி, ஓய்வுநிலை பணிப்பாளர் கலாநிதி. உ. நவரத்தினம், சிரேஷ்ட மெல்லிசைப் பாடகர் கலாபூஷணம் வெ. முத்தழகு, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. க. இரகுபரன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் திரு. சந்திரமௌலீசன் லலீசன், சைவநெறிப் பயிற்சி மையத் தலைவர் திரு. செ. நவந்தீகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ம. சுதர்ஷினி, ஊடகவியலாளர் திரு. ராதா மேத்தா மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி , இரத்மலானை அதிபர் திரு. சோமசுந்தரம் முரளி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது “தமிழ்த் தீபம்” சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, முத்தமிழ் விழா சிறப்புக் காணொளி ஒளிபரப்பு, குழு இசை, பல்லியம், சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டு, கிராமிய நடனம் மற்றும் இலக்கிய நாடகம் ஆகிய மாணவர்களின் கலைப் படைப்புகளும் இடம்பெற்றன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு, விருந்தினர்கள் மற்றும் மன்றச் செயற்குழு உறுப்பினர்கள் கௌரவிப்பு, நன்றியுரையைத் தொடர்ந்து கல்லூரிக் கீதத்துடன் விழா நிறைவுற்றது.

