பௌத்த சமூகத்தின் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் ஒன்றிணைய வேண்டும்: தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க, எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
“கடந்த 48 மணிநேரத்தில் சிங்கள பௌத்த சமூகத்தை மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கிய ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு பௌத்தனாக எனது மனதிலும் இது பெரும் கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கிய பெரும்பான்மையான மக்கள் இடதுசாரிகளும் தேசியவாதிகளுமாவர். அரசாங்கம் கவர்ச்சிகரமான முறையில் முன்வைத்த வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தனர். ஆனால், மக்கள் எதிர்பார்த்தது போல் விஷயங்கள் நன்முறையில் நடக்கின்றனவா? நாட்டின் பொதுமக்கள் அமைதியாகச் சிந்திப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதா? தற்போதைய அரசாங்கத்தை நம்பி வாக்களித்த இடதுசாரி, தேசியவாத சிங்கள பௌத்த மக்கள் இன்று திருப்தியடைய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அத்துடன், வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தையோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளையோ அவமதிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படாது.

எனினும், ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் குறித்தே ஐக்கிய மக்கள் சக்தி கவலையடைகிறது. தேரரின் காவி உடை அகற்றப்பட்டதன் மூலம் பௌத்த சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவி உடை என்பது எமது நாட்டின் அடையாளம், நாம் முதற்கண் அந்த ஆடைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு தரப்பினரைப் பயன்படுத்தி சிங்கள பௌத்த சமூகத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரு அரசாங்கமும் நாடும் இந்தளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது.

இலங்கை ஒரு பௌத்த நாடாக, அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்கள் அமைதியாக வாழக்கூடிய சூழலைக் கொண்டிருந்தது.

தீவிரவாதப் போக்குடைய சில நபர்களால் நாடு 30-40 ஆண்டுகள் பெரும் துன்பத்தை அனுபவித்தது. எனினும், மீண்டும் தீவிரவாதத்தைத் தூண்டி அமைதியாக வாழும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்த ஒரு சாரார் முயற்சிக்கின்றனர்.

இத்தகைய சந்தேகங்கள் தலைமுறை தலைமுறையான வெறுப்பாக மாறக்கூடும்.
அத்துடன், எந்தவொரு மதத்திலும் ஒழுக்கத்திற்கு மாறான விஷயங்கள் நடக்குமாயின், அதற்கு எடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, இத்தாக்குதலை முழுமையாக முஸ்லிம் சகோதரர்கள் மீது சுமத்த சிலர் முயன்றனர்.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அந்த நிலைப்பாட்டில் இருக்கவில்லை. இது முழு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையல்ல, முஸ்லிம் என்ற பெயரில் இருந்த தீவிரவாதிகளின் பிரச்சினை என்று தைரியமாகக் கூறும் முதுகெலும்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியைப் போன்று அனைத்து இனத்தவர்களும், அனைத்து மதத்தவர்களும் சுமுகமாக வாழக்கூடிய வேறொரு கட்சி உள்ளதா? எமது கட்சியில் உள்ள ஏனைய மதத்தினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஏனெனில் நாம் மனிதநேயத்தை மதிக்கிறோம். ஆனால், எமது அடக்கத்தைப் பயன்படுத்தி எமது கலாசாரம், எமது உரிமைகள், எமது நம்பிக்கைகள் மற்றும் எமது இருப்பை அழிக்க நினைத்தால், நாம் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

எனவே, பௌத்த மதத்திற்குப் பாதிப்பு ஏற்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் களத்தில் குரல்கொடுப்பது போல், மகா சங்கத்தினருக்கும் இதற்காக முன்வரும் பொறுப்பு உள்ளது.

நாட்டில் உள்ள மகா சங்கத்தினர் தங்களுக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பௌத்த சமூகத்தைப் பாதுகாக்க அணிதிரளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுக்கிறது.

பௌத்த சமூகத்தைப் பாதுகாத்தால் மட்டுமே நாட்டில் ஏனைய மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கும் உரிய இடம் கிடைக்கும். மக்களின் நம்பிக்கைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டால், மக்களின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.