அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளும் காணி ஆக்கிரமிப்பும்: முஜிபுர் ரஹ்மான் கடும் தாக்கு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 8% ஆக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 8.7% ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் சராசரி பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட இந்த உயர்த்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு முடியவில்லை என்றும், இதனால் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து அவர்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதாகக் கூறி அமைச்சரவை மூலம் 4,100 மில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதும், நடைமுறையில் நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக எரிபொருள் விலைகளே உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 414 ரூபாய் ஆகவும், சுப்பர் டீசல் லீட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 528 ரூபாய் ஆகவும், வெள்ளை டீசல் லீட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 392 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்த 4,100 மில்லியன் ரூபாய் நிவாரணம் சாதாரண பொதுமக்களுக்குச் சென்றடையாமல் இந்தியாவில் உள்ள எரிபொருள் நிறுவனத்திற்கும் சீன எரிபொருள் நிறுவனத்திற்குமே சென்று சேர்ந்துள்ளதாகவும், நிவாரணம் அளிப்பதாக இருந்தால் விலை குறைந்திருக்க வேண்டுமே தவிர அதிகரித்திருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலையே விலை உயர்வுக்குச் சாக்குப்போக்காக அரசாங்கம் கூறுவதாகத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்காமல், பல மாதங்களுக்கு முன்பே இறக்குமதி செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களுக்கே அக்டோபர் 1 ஆம் திகதி முதல் விலையை உயர்த்தியுள்ளனர் எனக் கூறினார்.

துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் வரிகளை உயர்த்தியுள்ள அரசாங்கம், இவ்வரிகளைக் குறைத்திருந்தால் 4,100 மில்லியன் ரூபாயை ஒதுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அத்துருகிரியிலுள்ள ‘மில்லேனியம் சிட்டி’ வீட்டுத் திட்டத்திற்குச் சொந்தமான சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான 100 பேர்ச் நிலத்தை, அப்பகுதியிலுள்ள அரசாங்க அரசியல்வாதிகள் கனரக இயந்திரங்களைக் கொண்டு பலவந்தமாகக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

அனைவருக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறினாலும், இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக அத்துருகிரிய பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாகச் சாடினார்.

பிரதேச செயலாளர் மூலமான சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியார் நிலங்களை ஆக்கிரமித்தால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்பதால், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.