இலங்கையில் சாரதிகளுக்கான குறைப்புப் புள்ளி முறைமை (Demerit Points System) முன்னோடித் திட்டம் ஆரம்பம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய போக்குவரத்துச் செயல்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிகளை மீறும் அனைத்து சாரதிகளுக்குமான “சாரதி குறைப்புப் புள்ளி முறைமை” (Demerit Points System) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தேசிய திட்டத்தைப் பற்றிய விசேட செய்தியாளர் சந்திப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (2026.09.28) பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள ‘மகநெகும மகமெதுர’ அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த முன்னோடித் திட்டம் 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 2027 மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்திற்குச் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இந்த ஆறு மாத காலத்தில் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த புதிய பாதுகாப்பு முறைமையுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்படும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை பொலிஸ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், Lanka Pay, Gov Tech உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான வீதிகளில் பயணிக்கும் அனைத்துச் சாரதிகளும் இந்த ஆறு மாத காலத்திற்குள் இப்புதிய முறைமைக்கு பழக்கப்படுவது அவசியமாகும்.
ஆறு மாத முன்னோடித் திட்டத்தின் முடிவில், வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சாரதிகளுக்கான குறைப்புப் புள்ளி முறைமை 33 வகையான போக்குவரத்து வீதிமீறல்களுக்காகச் சட்டப்பூர்வமாக முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குச் இணையான நடவடிக்கையாக Gov-Pay தளத்தின் ஊடாக அரசுக்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் முறையும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட ஆன்லைன் அபாரதக் கொடுப்பனவு முறைமை, முதற்கட்டமாகக் குருநாகல் மற்றும் அனுராதபுர வீதிகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2025 டிசம்பர் முதல் நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் Fintech செயலிகள் மூலமாக Gov-Pay ஊடாக எளிதாக அபராதத்தைச் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாட்டில் வீதி விபத்துக்களினால் ஆண்டொன்றுக்கு 2,750 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதைத் தடுப்பது அவசியமானது என்றும், இத்தகைய உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பாரிய இழப்புகளைத் தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், ஒரு குடிமகனுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது வெறுமனே உரிமையோ அல்லது சொத்தோ அல்ல; அது ஒரு பாரிய பொறுப்பாகும் எனக் கூறியதுடன், சட்டத்தை மதிக்காமல் வாகனம் செலுத்துபவர்களை மட்டுமே பாதிக்கும் இத்திட்டம் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் கீழ் 2027 மார்ச் முதல் வீதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அவந்தி சேனாரத்ன, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, Lanka Pay நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சன்ன டி சில்வா உட்படப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

