அநுர அரசாங்கத்தின் கருத்துக்கள் நேர்மையானதா? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இராணுவ தேவைகளுக்கு அவசியமற்ற தனியார் காணிகளை விடுவிப்பது இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடெனில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

14 ஆவது வாரமாக பலாலி பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசாங்கம், தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்து மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டது. இரண்டு வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

அண்மையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அருரகுமார திசாநாயக்க, இராணுவ தேவைகளுக்கு தேவையற்ற தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்து நேர்மையானதாக இருப்பின் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, பலாலி வீதியின் கிழக்குப் புறமாக இருக்கின்ற 290 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே அப்போதைய அரசாங்கமும் படைத்தரப்பினரும் சம்மதம் தெரிவித்து பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையினால் அது சாத்தியமாகவில்லை.

அதாவது, குறித்த 290 ஏக்கர் காணிகளும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்ற பிரதேசம் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்னர் படைத் தரப்பினராலேயே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதியின் கருத்துக்கள் நேர்மைானது எனில் குறித்த 290 ஏக்கர் காணிகளையாவது விடுவித்து இருக்க முடியும்.

எனவே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கருத்துக்கள் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

இந்நிலையிலேயே மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடும் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எமது ஆதரவு தொடரும்” என்று தெரிவித்தார்.