ஜனநாயக பாரம்பரியத்தைப் பாதுகாத்து தொழில்நுட்பம் மற்றும் சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்… பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இன்றைய தினம் (15) ராஜகிரிய மத்திய வங்கி கல்வி மையத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் மின்னணு சேவை (E-Services) அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையும் முதன்நாள் உறை வெளியீடும் இதன்போது இடம்பெற்றன.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
“ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டத்தின் ஆட்சியே திகழ்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எந்தவொரு தராதரத்தில் உள்ள நபரும் சட்டத்திற்கு மேலானவராக இருக்க முடியாது. கடந்த காலத்தில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க மற்றும் நடைமுறைச் சாத்தியமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதலாவதாக, அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழுச் சுதந்திரத்தைப் பொலிஸ், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறைக்கு வழங்கியுள்ளோம். எத்தகைய அரசியல் அழுத்தங்கள் வந்தபோதிலும், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்ததாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்தி, பொதுப் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள், அரசுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் லஞ்சம் பெற்றவர்களுக்கு எதிராகக் கட்சி வேறுபாடின்றி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டுக்கு அதிகளவில் வெளிநாட்டுச் செலாவணியை அனுப்பி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும், ஆனால் இதுவரை வாக்களிக்கும் உரிமையற்றிருந்த வெளிநாடவாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான வழிமுறையைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தீர்க்கமான அடியாகும்.
அதேபோன்று, அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறைகள், ஒப்பந்தங்கள் வழங்குதல் மற்றும் அரச கொள்வனவுகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோசடி மற்றும் ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டு, அரச சேவையானது மக்களுக்குக் கௌரவத்துடன் சேவையாற்றும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் கொள்கையான ‘எவரையும் கைவிடாத’ அணுகுமுறையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை மனித உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில் எமது மக்கள் எடுத்த அந்தத் தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மலர்ந்து வருகின்றது.

இனம், மதம் அல்லது சாதி வேறுபாடின்றி, அனைவருக்கும் உரிமையுள்ள ஜனநாயக, சட்டத்தை மதிக்கும் மற்றும் நியாயமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே அனைவரினதும் இலக்காக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிச்சிலா தமாங் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.