22ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24 பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

எதுல்கோட்டேயிலுள்ள உள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைமை அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அரசாங்கத்தின் உள்ளிருந்தே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் மூலம் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்பட்டு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெளிவாகிறது.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர கணிசமான பங்களிப்பை வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் 22ஆவது திருத்தத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பொறுப்பு வகித்த இவர்கள், இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்க முடியாது என்பதால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பகிரங்கமாகப் பேச வேண்டும்.

அதேபோல், பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. நாட்டின் மக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான திசைகாட்டி (தேசிய மக்கள் சக்தி) பாரிய ஆணையையும் நம்பிக்கையையும் வழங்கினர்.

ஜே.வி.பி.யின் தீவிர அரசியலை மக்கள் மறந்து திசைகாட்டியை நம்பியதற்கு ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரே காரணம் என்பதால், அந்தப் பொறுப்பிலிருந்து விலகி பிரதமர் ஹரிணியால் 22ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது.

தனது தெளிவான நிலைப்பாட்டை அவர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உள்ளிருந்தே எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் ஜே.வி.பி.யின் உள்முரண்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்.

22ஆவது திருத்தம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகும். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பாராளுமன்றத்திற்குள் தோற்கடிக்கும் ஆற்றல் எதிர்க்கட்சிக்கு இல்லை என்ற போதிலும், அதனை பாராளுமன்றத்திற்குள் தோற்கடிக்கும் பொறுப்பும் வல்லமையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் திசைகாட்டி குழுவினருக்கே உள்ளது. அதேவேளை, பாராளுமன்றத்திற்கு வெளியே அதனைத் தோற்கடிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் பொறுப்பேற்றுள்ளன.

இதற்கமைய, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரும் 24ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக மாலினாவிற்கு வாக்களித்தவர்களுக்கும் மற்றும் காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் முறைமை மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாப்பது தொடர்பில் அவசர விவாதத்தைக் கோரி 2026.05.06 அன்று சபாநாயகருக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டமை, நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு ஊடக அறிக்கை வெளியிட்டமை, சபாநாயகர் விவாத நிராகரிப்புச் செய்தமைக்கு எதிராக எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் ஊடக அறிக்கை வெளியிட்டமை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு (BASL) கடிதம் மூலம் தெளிவுபடுத்தியமை, பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27 (2) இன் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து கேள்வி எழுப்பியமை, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் நீதிமன்ற சுயாதீனம் தொடர்பான கூட்டத்தை நடத்தியமை, இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (SLFI) சமகி சட்டத்தரணிகள் சங்க மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியமை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் மனுவில் கையெழுத்து வேட்டையை நடத்தியமை, BASL பிரதிநிதிகளின் பங்கேற்புடன் எம்.பி.க்களுக்கான பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியமை மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமை போன்ற முக்கிய செயற்பாடுகள் இதில் அடங்கும்.

மேலும், பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகரவின் கருத்துக்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது. 71, 88/89 கலவரங்களில் பங்கேற்காத அவர், தற்போதைய இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்துகிறார். வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தவறு என்பதை ரோஹண விஜேவீரவும், 88/89 தவறுகள் குறித்து அனுர குமார திஸாநாயக்கவும்கூட ஒப்புக்கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கையில், 71 மற்றும் 88/89 காலப்பகுதிகளில் வன்முறையால் செய்ய முடியாததை, தேர்தலின் மூலம் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி செய்ய ஜே.வி.பி முயல்கிறது என்பதை பிரசன்ன குணசேகரவின் பேச்சு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

எனவே, மீண்டும் ஒரு இரத்தக் களரியை நாட்டில் உருவாக்க விரும்பாவிட்டால், அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார அரசியலமைப்பு சதியைத் தோற்கடிக்க வரும் 24ஆம் திகதி அனைத்து மக்களையும் வீதியில் இறங்கிப் போராடுமாறு கேட்டுக்கொள்வதாக கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.