உயிர்த்த ஞாயிறுத் வழக்கு: தீர்ப்பைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் பூஜித்த மற்றும் ஹேமசிறி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான உயிர்த்த ஞாயிறுத் தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த முன் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அத்தாக்குதல்களைத் தடுக்கத் தவறி பெருமளவிலான மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய இருவரின் பெரும்பான்மைத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

பிரதிவாதிகள் இருவருக்குமெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில், குற்றவியல் அலட்சியம், கடமை தவறியமை மற்றும் உயிரிழப்புகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது.

அதேவேளை, அமர்வின் மூன்றாவது நீதிபதியான விராஜ் வீரசூரிய, அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது எனக்கூறி, இருவரையும் விடுவிக்க வேண்டும் எனத் தனது மாறுபட்ட தீர்ப்பைப் பதிவு செய்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மாநில புலனாய்வுச் சேவையின் அப்போதைய தலைவர் மூலமாக ஏப்ரல் 20ஆம் திகதியே அதிகாரிகளுக்குத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இருப்பினும், குற்றங்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட உயர் பொறுப்புமிக்க அதிகாரிகள் என்ற ரீதியில், அத்தகவல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையே இவர்கள் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.

முன்னதாக 2022ஆம் ஆண்டில், இந்த வழக்கிலிருந்து இவர்கள் இருவரையும் மேல் நீதிமன்ற அமர்வு விடுவித்து உத்தரவிட்டிருந்தது. எனினும், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்விடுதலைச் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தீர்க்கமான விசாரணைகளின் முடிவிலேயே தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதிகள் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.