வெப்பத்தைத் தணிக்க ‘வான் எல’ குளத்தில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்த அதீத வெப்ப அலை காரணமாக மனிதர்கள் மட்டுமன்றி, காடுகளில் வாழும் வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிலவி வரும் கடும் வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக, கந்தளாய் – வான் எல குளத்தைத் தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளன.
பகலின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், பெரிய யானைகள் முதல் குட்டிகள் வரை பல டஜன் கணக்கான யானைகள் வான் எல குளத்து நீரில் மூழ்கியும், தும்பிக்கைகளால் நீரை இறைத்தும், ஒன்றோடு ஒன்று விளையாடியும் மகிழும் கண்கொள்ளாக் காட்சிகள் தற்போது இப்பகுதியில் பதிவாகி வருகின்றன.
வழமையாக மாலை வேளைகளில் காட்டை விட்டு வெளியேறும் இந்த யானைக் கூட்டங்கள், தற்போது நிலவும் அசாதாரண வெப்பம் காரணமாக நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் வான் எல குளத்தில், யானைகள் கூட்டமாக நீராடி விளையாடும் இந்த அழகிய காட்சிகளை அப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

