நள்ளிரவிலும் கால்பந்து ஜுரம்: காலிமுகத்திடலை அதிரவைத்த ரசிகர்கள்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை இராட்சத திரைகளில் நேரலையாகக் காண்பதற்கு, நள்ளிரவையும் பொருட்படுத்தாது கொழும்பு காலிமுகத்திடலில் (Galle Face Green) பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தங்களது ஆதரவு அணிகளின் ஜெர்சிகளை அணிந்தவாறும், கொடிகளை ஏந்தியவாறும் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த ரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஒலி நள்ளிரவிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைத்தது.

சாதாரண ரசிகர்களின் இந்த அதீத உற்சாகக் கொண்டாட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சரும் ஒரு சாதாரண பார்வையாளராக கலந்துகொண்டமை அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விசேட பிரமுகர்களுக்கான எவ்வித ஆடம்பரங்களுமின்றி, சாதாரண மக்களுடன் அமர்ந்து அவரும் போட்டியின் ஒவ்வொரு விறுவிறுப்பான கணத்தையும் ஆவலோடு ரசித்துப் பார்த்தார்.

இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கான உத்வேகத்தையும், இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விசேட நேரலை ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நள்ளிரவு வரை நீடித்த இந்த பிரம்மாண்ட நிகழ்வு காரணமாக காலிமுகத்திடல் சூழலிலுள்ள நடமாடும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் பெரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டதோடு, கொழும்பில் தங்கியிருந்த கணிசமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த கால்பந்து திருவிழாவில் இணைந்து கொண்டு மகிழ்ந்தனர்.

அதேவேளை, பெருந்திரளான மக்கள் கூடியதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காலிமுகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பும், போக்குவரத்து ஒழுங்குகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

நள்ளிரவையும் பகலாக்கிய இந்த கால்பந்து உத்வேகம், இலங்கையில் கிரிக்கெட்டிற்கு இணையாக கால்பந்து விளையாட்டும் மக்கள் மத்தியில் எவ்வளவு பலமாக வேரூன்றியுள்ளது என்பதை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்திருந்தது.