நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு நீதி கோரி பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இலங்கையர்கள் திரண்டனர்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பாரிஸ்:
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மிக இக்கட்டான காலகட்டத்தில், நாட்டிற்காக சிறப்பான சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பிரான்சில் வாழும் இலங்கை தேசப்பற்றாளர்கள் பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற குடியரசு சதுக்கத்தில் (Place de la République) பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
பாரிஸ் நகரின் குடியரசு சதுக்கத்தில் ஒன்றுகூடிய பெருந்திரளான இலங்கையர்கள், இந்த அமைதி வழி போராட்டத்திலும் சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டனர்.
யுத்த காலப்பகுதியில் பிரான்சிற்கான இலங்கை தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றிய சுரேஷ் சலே, தாய்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய எல்.டி.டி.ஈ. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக வெளிநாட்டு மண்ணில் இருந்து ஆற்றிய இணையற்ற பங்களிப்பை பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் இதன்போது நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்தனர்.
அன்று முதல் இன்று வரை நாட்டை நேசிக்கும் மக்கள், மேஜர் ஜெனரல் சலே ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை நன்கு அறிவர் எனச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், தற்போது அவருக்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவாக எழுந்து நிற்பது தங்களது தேசியக் கடமையாகும் என்றும் வலியுறுத்தினர்.
யுத்த வெற்றிக்காக திரைமறைவில் இருந்து பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த இதுபோன்ற யுத்த வீரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது ஒட்டுமொத்த தேசத்தினதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்த பிரான்ஸ் வாழ் இலங்கை சமூகம், தாய்நாட்டிற்காக வெளிப்படுத்திய இந்த தேசப்பற்றுமிக்க ஆதரவு பலரதும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நேரடி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

