சூரியகாந்தி விதையென நினைத்து ஆமணக்கு விதை பகிர்ந்து உண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கந்தளாயில் உள்ள பாடசாலை ஒன்றில், வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட விதைபோன்ற உணவை பகிர்ந்து உண்ட 22 மாணவர்கள் உணவு ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மை சந்தேகத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

தரம் 6-இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், வீட்டில் இருந்து கொண்டு வந்த விதைகளை தனது சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார். பின்னர் அந்த விதைகளை உண்ட 22 மாணவர்களும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 20 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவிகளும் உள்ளனர். இவர்களில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது. ஆனால் இன்று, சூரியகாந்தி விதைகள் என நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து கொண்டு வந்து பகிர்ந்து உண்டதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.