மன்னாரில் 215 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் — “சொந்த இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ் மற்றுமொரு சாதனை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
“சொந்த இடம் – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் வீட்டுவசதித் திட்டத்திற்கு அமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன், ஒரு வீட்டிற்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் மீளப் பெறாத நிதியுதவி வழங்கப்பட்டு இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 215 குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 215 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிலையானதொரு தங்குமிடத்தை வழங்குவதும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுமே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதன் மூலம் மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் கே. காந்தீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச வாசிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற திட்டங்கள் மூலம் வறிய குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை நிலையானதாகக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாகவும் இந்த வீட்டுவசதித் திட்டம் கருதப்படுகிறது.


