முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவிற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் சவேந்திர சில்வா நேரில் அஞ்சலி…
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதை அடுத்து, கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் நேரடியாக வருகை தந்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மறைவையொட்டி, நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலைக்கு தொடர்ந்தும் வருகை தந்து வண்ணம் உள்ளனர்.
இதன்போது, மலர்ச்சாலைக்கு நேரடியாக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலத்தின் போதே, நாட்டின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபராக இருந்த சி.டி. விக்ரமரத்னவிற்கு பலமுறை சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் மலர்ச்சாலைக்கு நேரடியாக வருகை தந்து, பாதுகாப்புத் துறையில் சி.டி. விக்ரமரத்ன ஆற்றிய காத்திரமான சேவைகளை நினைவு கூர்ந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளைக் கையாள்வதில் திறம்பட செயல்பட்ட ஒரு அதிகாரியாக அறியப்பட்டவர்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.


