‘ஹரக் கட்டா’ விவகாரம்: ரகித ராஜபக்ஷ உட்பட மூவரின் விளக்கமறியல் ஜூலை 28 வரை நீடிப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து 1,200 இலட்சம் ரூபா (12 கோடி) இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான ‘ஹரக் கட்டா’வுக்கு சிறைச்சாலையில் பல்வேறு சலுகைகளையும் சொகுசு வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த பெருந்தொகை இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தொலைபேசி குரல் பதிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த மூன்று சந்தேகநபர்களும் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவர்களுக்கான விளக்கமறியல் காலத்தை மேலும் நீடித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

