ராகமவில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் கைது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மதுவரி விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, ராகம, பேரலந்த, பொடி வீ யாய வயல் பிரதேசத்தில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டது.
இந்த முற்றுகையின்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 46 வயதுடைய இருவர் மதுவரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மதுபானம் தயாரிப்பதற்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 3,800 லீற்றருக்கும் அதிகளவிலான ‘கோடா’ மதுவரி அதிகாரிகளினால் அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது. அத்துடன், விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 300 லீற்றருக்கும் அதிகளவிலான ஸ்பிரிட் மற்றும் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு மதுவரி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

