ஹார்முஸ் நீரிணை மூடல் எதிரொலி – ஈரானின் 140 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல
Meiveli Media Team

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் 140 ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் கடலோர ராணுவ முகாம்கள், ஏவுகணை தளங்கள், ட்ரோன் மையங்கள், கடற்படை தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்டவை இலக்குகளாகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையமான சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனினும், பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹார்முஸ் நீரிணையில் குறிப்பிட்ட வழித்தடத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஈரானின் உத்தரவை மீறி பயணித்த ஜிஎப்எஸ் கேலக்ஸி எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் கப்பலில் தீப்பற்றியதுடன், 11 இந்திய மாலுமிகளில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த மோதலின் தாக்கம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

