30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

Meiveli Media Team


புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
88 வயதில் காலமான எஸ். ஜானகி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இசைத்துறையில் தனித்துவமான முத்திரை பதித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 20 மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்தார். ‘கான கோகிலா’இ ‘இசையரசி’ என்ற பட்டங்களால் போற்றப்பட்ட அவர், நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த எஸ். ஜானகி, உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா, பாடகி பி. சுசீலா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக கனியனஹண்டியில் உள்ள பண்ணைத் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை நடத்தினர். கர்நாடக அரசு சார்பில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே, மறைந்த எஸ். ஜானகிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து கன்னட திரையுலகினருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.