தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி: காணி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண தீர்மானம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் புதிய கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இதற்கமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கூட்டணியின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக ஒன்றிணைவை அறிவித்தனர்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், குறிப்பாக காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பலமாகச் செயற்படுவோம் என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தேசம் முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் திட்டமிட்ட காணி அபகரிப்புகள் இன்றளவிலும் தீவிரமாக இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனால், தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் தற்போதைய சூழலில் ஒன்றிணைவது அவசியமானது என்றும், இந்த ஒற்றுமை எக்காரணம் கொண்டும் குலையாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்தக் கூட்டணி என்பது வெறுமனே தேர்தல் காலங்களுக்காக ஒன்றுசேர்ந்த தற்காலிகக் கூட்டணி அல்ல எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் ஒன்றிணைந்துள்ள ஒரு தேசிய மேடை என்று பிரகடனப்படுத்தினார்.
இன்றைய இணக்கப்பாட்டின் படி, காணி உரிமை உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இப்புதிய கூட்டணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிதைந்து போகாத ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும் எனவும் தலைவர்களால் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

