தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வே சம்பந்தனின் இலக்கு – தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவிப்பு

Meiveli Media Team


மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மறைந்த இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுஇ திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன், சம்பந்தனின் அரசியல் பயணத்தையும் தமிழ் மக்களின் உரிமைக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்தார். 1961 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் தந்தை செல்வா விடுத்த அரசியல் அழைப்பை சம்பந்தன் ஏற்கவில்லை என்றும், பின்னர் 1975ஆம் ஆண்டு இடைத்தேர்தலின் மூலம் அரசியலுக்குள் நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறந்த சட்டத்தரணியாகப் பணியாற்றிய சம்பந்தன், அரசியல் பணிக்காக தனது சட்டத் தொழிலையே துறந்தார் என்றும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு வரைவு பலவீனப்படுத்தப்பட்டதற்கு சம்பந்தன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 2015ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக இருக்க வேண்டும் என்பதை சம்பந்தன் தெளிவாக வலியுறுத்தியதாக சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து தற்போதைய ஜனாதிபதிக்கு தெளிவான புரிதல் இருப்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.