டெங்கு தீவிரம் அதிகரிப்பு – கொள்ளளவை மீறறும் மேல் மாகாண மருத்துவமனைகள்
Meiveli Media Team

நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேல் மாகாண மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பி, சில இடங்களில் ஒரே கட்டிலில் இருவர் முதல் மூவர் வரை அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன. டெங்கு மேலாண்மைக்கான விசேட நிபுணர் குழு உறுப்பினர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலுக்கான மிக அதிக அபாயக் காலமாக இருக்கும் என எச்சரித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 68 ஆயிரத்து 672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களிலேயே 10 ஆயிரத்து 685 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஜூலை 12ஆம் திகதி மட்டும் புதிதாக ஆயிரத்து 30 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 52.7 சதவீதம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதிக டெங்கு பாதிப்புள்ள மாவட்டமாக கொழும்பை முந்தி தற்போது கம்பஹா மாவட்டம் முதலிடத்துக்கு வந்துள்ளது. இதற்கிடையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முப்படைகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் விசேட அவசர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு தடுப்பூசிகள் சில ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவற்றை உடனடியாக இலங்கையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

