மொனராகலை மாவட்டத்தில் பலத்த காற்றால் 42 வீடுகள் சேதம்
Meiveli Media Team

நாட்டில் நிலவி வரும் பாதகமான வானிலை காரணமாக, மொனராகலை மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதில் 42 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வீசிய கடும் காற்றினால் வீடுகளின் கூரைகள் பறந்ததுடன், சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தால் பல குடும்பங்கள் தற்காலிக சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அவசர நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதேவேளை, தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பலவீனமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

