கோட்டாபய ராஜபக்ஷவின் நீதிமன்ற கோரிக்கை ஈஸ்டர் தாக்குதல் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது: நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை அரசாங்கமாகிய நாங்கள் செய்யவில்லை என்றும், அதனை விசாரணை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுமே சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போலன்றி, இந்த நிறுவனங்களை வலுப்படுத்தி, அவற்றின் மீதான அரசியல் அழுத்தங்களை முற்றாக நீக்கி, விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான சூழலையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அதன் பலன் தற்போது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நீதிமன்ற நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தன்னை கைது செய்ய வேண்டாம் எனக்கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது, தமக்கு மட்டுமல்லாது நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் அவர் மீது ஒரு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகக் கூறினார்.
தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு நபர், ‘என்னை கைது செய்ய வேண்டாம்’ என்று நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படியென்றால் இதில் ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருடன் பிடிபடுவதற்கு முன்னர் அவசரமாக தப்பியோட முயல்வதைப் போன்ற ஒரு கிராமத்துப் பழமொழிக்கு அமைவான உதாரணமாகவே இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் சாடினார்.
மேலும், கடந்த காலங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்படப் போகிறார்கள் என்பது குறித்து அவர்களின் சகாக்கள் முன்னரே கூறிவந்ததை சுட்டிக்காட்டிய அவர், தமக்குத் தெரியாவிட்டாலும் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்விசாரணைகளுக்கு தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நஜீத் இந்திக்க, நாட்டில் சட்டத்தை முறையாக நிலைநாட்டுவதற்காகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது என்பதை நினைவூட்டினார்.
எனவே, விசாரணை நிறுவனங்களை பலப்படுத்தி, அரசியல் தலையீடற்ற பின்னணியை உருவாக்கி, அதிகாரிகள் அச்சமின்றி கடமையாற்றுவதற்கான முழுமையான ஆதரவையும் பலத்தையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

