இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டிற்காக நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நமது நாடு பாரதூரமான பல ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. பல்வேறு தரப்பினர், குழுக்கள் மற்றும் அமைப்புகள் நமது நாட்டில் தற்சமயம் எழுந்து காணப்படும் ஆபத்தான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, இந்த அபாயகரமான நிலையில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு அதன் மூலம் நமது நாட்டின் இறையாண்மையை சீரழிப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்து வருகின்றன. ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம் எம்மத்தியில் காணப்படும் அரசியல் பன்முகத்தன்மை மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது நமது நாட்டை பாதுகாக்க நாமனைவரும் ஒன்றாய் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த அமரபுர சிரி சத்தம்மவம்ச மகா நிகாயவின் அனுநாயக்கரும், ரந்தொம்பே சங்கராஜ மகா விகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய கொஸ்கொட சுபூதி நாயக தேரர் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாச காலத்தில், உதா கம்மான மாதிரி கிராமம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கொஸ்கொட சுபூதி நாயக தேரர் அவர்கள் மிகப்பெரும் பங்களிப்பை நல்கினார். பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்துக்கும் அளப்பரிய சேவைகளை இவர் ஆற்றியுள்ளார். ஜனாதிபதி நடமாடும் சேவை வேலைத்திட்டங்கள் மூலம் மக்களிடம் சென்று பிரச்சினைகளை தீர்க்கும் பணியில் நாடு முழுவதும் நடமாடும் சேவை திட்டங்கள், ஜன சவிய மற்றும் கம் உதாவ வேலைத்திட்டங்களுடன் இணைந்து கொண்டு மகத்தான சமூக பங்களிப்புகளையும், வழிகாட்டுதலையும் இவர் நாட்டுக்கு நல்கியுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் புத்த சாசன அமைச்சு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி அவர்களினது காலத்திலே தாபிக்கப்பட்டது. புத்த சாசனத்திற்கு உயரிய அந்தஸ்தை வழங்கி, அதற்கு உன்னத நிலையை பெற்றுக் கொடுத்து, அதை வலுப்படுத்துவதும் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நாட்டின் அரசியலமைப்பில் நித்திய விதியாக ஆக்கி, நாட்டில் உள்ள ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு உரிய அந்தஸ்துகளையும், உரிய இடங்களையும் பெற்றுக் கொடுத்து, அமைச்சரவை அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை தாபிப்பதிலும், பாதுகாப்பான இறையாண்மை கொண்ட நாடு என்ற பயணத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் கொஸ்கொட சுபூதி நாயக தேரர் அவர்கள் தமது வழிகாட்டுதல்களையும் பங்களிப்புகளையும் நல்கினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.