இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026–2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) நேற்றைய தினம் (16) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துகொண்டார்.
அத்துடன், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட பல அமைச்சுக்களின் செயலாளர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிர்வாகப் பணிப்பாளர் ஷானன் கோலின், சிரேஷ்ட பொதுத்துறை பொருளாதார நிபுணர் நைடா முக்தார் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இதில் கலந்துகொண்டனர்.
இவர்களுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளும், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்கள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது, 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு இணங்க, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதையும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய தேசிய வேலைத்திட்டமாகும். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைமையின் கீழ் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) திட்டத்தின் ஊடாக தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டமானது அரசாங்கத்தின் பிரதான நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் முடிவாகும். இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்புக்கான உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு 2026 மே 4 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குக் கொள்கைக்கு அமைய, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை உயர்த்துவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதற்கும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவையாற்றும் ஒரு போட்டித்தன்மைமிக்க, விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த மூலோபாயத் திட்டம் ‘கிடைமட்டத் துறைகள்’ (Horizontals) மற்றும் ‘முன்னணித் துறைகள்’ (Verticals) ஆகிய இரண்டு பரஸ்பர தூண்களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னணித் துறைகளின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தேவையான அடித்தளத்தை வழங்கும் ஆறு கிடைமட்டத் துறைகளாக (Horizontals) வர்த்தக விநியோகஸ்தம் மற்றும் ஒருங்கிணைந்த மையச் செயல்பாடுகள், வர்த்தக வசதியளிப்பு, வர்த்தக நிதி மற்றும் வணிக, முதலீட்டுச் சூழல் சீர்திருத்தங்கள், வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் சந்தைத் தொடர்புகள், தர மேலாண்மை, தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) இணக்கம் அத்துடன் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்றுமதியைப் பல்வகைப்படுத்தவும் உலக சந்தையில் இலங்கையைப் போட்டித்தன்மையுடன் நிலைநிறுத்தவும் எட்டு முன்னணி ஏற்றுமதித் துறைகள் (Verticals) அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் வாகன உதிரிப்பாகங்கள், கனிம அடிப்படையிலான தொழில்கள், ரப்பர் சார்ந்த தொழில்கள், படகு மற்றும் கப்பல் கட்டுதல் உட்பட்ட கடல்சார் தொழில்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட சாறுகள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மின்சாரம் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தைத் தயாரிப்பதில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் 2026 ஜனவரியில் நடைபெற்ற உறுதிப்படுத்தல் பயிலரங்குகள் மூலம் இதற்கான பரந்த பொது உடன்பாடு எட்டப்பட்டது.
வலுவான ஆளுகை மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது இனிவரும் காலங்களில் இலங்கை பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாகச் செயல்படும் என நம்பப்படுகிறது.

