கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்பதற்கும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வேண்டும். – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையும் இலங்கை நலன்புரி அரசின் முக்கிய அடித்தளமாக விளங்கினாலும், தற்போதைய கல்வி முறைமையானது ஆண்டுதோறும் தொழில் சந்தையின் தேவைகளுக்குப் பொருந்தாத, வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையே உருவாக்கி வருகின்றது. மனப்பாடம் செய்யும் கல்வி முறை உட்பட பாடசாலை பாடத்திட்டங்களில் காணப்படும் பொருத்தப்பாடின்மை, மொழி உரிமைகள் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது கல்வித் துறையை பின்னோக்கிப் பாதிக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்து காணப்பட்டாலும், இவற்றில், தேசிய பாடசாலைகளும் முன்னணி பாடசாலைகளும் மாத்திரமே அதிக வளங்களையும் வசதிகளையும் அனுபவிக்கின்றன. பெரும்பாலான பாடசாலைகள் இன்னும் குறைந்த வசதிகளுடனேயே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. நலன்புரி அரசின் நோக்கம் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதாக அமைந்து காணப்பட்ட போதிலும், தற்போது அந்த முறைமைக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆகையினால், கல்வித் துறையில் நிலவும் கட்டமைப்பு ரீதியான இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் போட்டித்திறனையும் வலுப்படுத்துவது மிக அத்தியாவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தின் (AIIA) பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
AIIA வின் விக்டோரியா கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள இப்பிரதிநிதிகள் குழு, இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமகால சமூக நிலவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. இரு தரப்பினருக்கும் இடையிலான இக்கலந்துரையாடல், நாட்டின் தற்போதைய அரசியல் பின்னனிச் சூழல், எழுந்து வரும் சமூக நிலை மற்றும் உள்நாட்டு அரசியலில் தோன்றி வரும் சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் என்பனவற்றிலும் கவனம் செலுத்தின.
அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் குழுவிற்கு, AIIA சபை உறுப்பினரும் தெற்காசிய நிகழ்ச்சித் திட்டத்தின் இணைத் தலைவருமான பிரகாஷ் மிர்ச்சந்தானி மற்றும் ரிச்சர்ட் அயர்ன் ஆகியோர் தலைமை தாங்கி வழிநடத்தினர். இப்பிரதிநிதிகள் குழுவில் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவைச் சேர்ந்த கல்வியாளர்கள், முன்னாள் இராஜதந்திரிகள், வர்த்தக தலைவர்கள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டதோடு, ஜனநாயக ஆட்சிமுறையின் முக்கியத்துவம், பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் மற்றும் சாதகமான சர்வதேச உறவுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். நிலைபேன்தகு அபிவிருத்தி மற்றும் ஆட்சிமுறையின் மீதான மக்கள் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, கொள்கைசார் ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன வலுவூட்டலின் அவசியப்பாட்டையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.
நாடு தழுவிய விரிவான ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும், இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவைப் பெறுவதற்கும் கிடைத்த இந்த வாய்ப்புக்கு தூதுக்குழு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தது.


