கொழும்பு பேராயராக அதிவணக்கத்திற்குரிய அந்தோனியஸ் மரியா பவுலோஸ் அபிஷேகம்: இலங்கையில் பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் வரலாற்றுச் சிறப்புமிக்க விசேட நிகழ்வு கந்தானையில் நடைபெற்றது!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தை உள்வாங்கிய உலகளாவிய கிறிஸ்தவ சபைகளில் ஒன்றான பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் (Believers Eastern Church) இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிய பேராயர் ஒருவரை நியமிக்கும் விசேட அபிஷேக விழா மற்றும் உலகளாவிய ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய திருவிழா நேற்றைய தினம் (12) கந்தானை புனித பேதுரு பேராலயத்தில் (St. Peter’s Cathedral) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் பயிற்சிப் பிரிவின் செயலாளரான அருட்தந்தை சுதத் சமீர (Father Sudath Sameera) அவர்கள்,
இலங்கைக்கு ஒரு புதிய பேராயர் நியமிக்கப்பட்டமையானது இத்திருச்சபைக்கு மிகவும் விசேடமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாளாகும். இத்திருச்சபையின் ஆன்மீகத் தந்தையான அதிவணக்கத்திற்குரிய மோரன் மோர் சாமுவேல் தியோபிலஸ் (Most Reverend Moran Mor Samuel Theophilos) அவர்களின் தலைமையில் இந்த உன்னத அபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராயர்கள், ஆயர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், இலங்கையின் இத்திருச்சபை வரலாற்றில் பேராயர் ஒருவர் உள்நாட்டில் அபிஷேகம் செய்யப்பட்டு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன்போது மொத்தம் நான்கு புதிய ஆயர்கள்/பேராயர்கள் அபிஷேகம் செய்யப்பட்டனர்.
அவர்களுள் ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய சபையின் குருவானவரான இலங்கையைச் சேர்ந்த கல்யாணப்பிரிய அவர்கள் புதிய ஆயராக பதவி உயர்த்தப்பட்டதுடன், ஏனைய மூன்று குருவானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்வில் கொழும்பு மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற உதவி ஆயர் அதிவணக்கத்திற்குரிய மரியஸ் பீரிஸ் (Most Reverend Marius Peiris) அவர்களும் கலந்துகொண்டு முதன்மை தாங்கி வழிநடத்தினார்.
அத்துடன் வெளிநாட்டு மதகுருமார்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கு இணையாக, பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் கொழும்பு மறைமாவட்டத்தின் (Colombo Diocese) புதிய பேராயராக (Archbishop) நியமிக்கப்பட்டுள்ள அதிவணக்கத்திற்குரிய அந்தோனியஸ் மரியா பவுலோஸ் (Most Reverend Anthony Mariya Paduoles) அவர்களின் அதிகாரப்பூர்வ நியமனம் மற்றும் ஆயர்நிலை அபிஷேகத்திற்கான விசேட கூட்டுத்திருப்பலியும் கொழும்பு பேராயர் இல்லத்தின் புனித இதய பேராலயத்திலும் (Cathedral of the Sacred Heart) மற்றும் கந்தானை பேராலயத்திலும் மிக உன்னதமான முறையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இத்திருச்சபையின் 23 கிளைகள் (Churches) தற்போது செயற்பட்டு வருகின்றன. இது குறித்து மேலும் விளக்கிய அருட்தந்தை சுதத் சமீர அவர்கள், இது ஒரு பாரம்பரியமிக்க கிறிஸ்தவ சபை (Traditional Christian Church) என்றும், ஆரம்பகால திருத்தூதர்களின் (Apostles) வழியிலும், இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் தொடங்கப்பட்ட ஒரு சபை என்றும் குறிப்பிட்டார்.
இயேசு கிறிஸ்துவின் 12 திருத்தூதர்களின் வழியைப் பின்பற்றியே இத்திருச்சபையின் தலைவர்கள் தங்களை வழிநடத்துவதாக அவர் தெரிவித்தார்.
ரோமன் கத்தோலிக்க சபைக்கும் பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சபைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து அவர் விளக்கும் போது, ரோமன் கத்தோலிக்க சபை ரோமாபுரியை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். அச்சபையின் தலைமைத்துவம் திருத்தந்தை (Pope) அவர்களிடம் இருந்து வருவதுடன், இயேசு கிறிஸ்துவின் முதன்மை சீடரான புனித பேதுருவின் (St. Peter) வழியில் அந்த தலைமைத்துவம் அமைகின்றது.
ஆனால், பிளீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் தலைமையகம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது என்பதுடன், இது ஆரம்பகால திருத்தூதர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஒரு பாரம்பரியமிக்க சபை என அருட்தந்தை சுதத் சமீர அவர்கள் தெளிவுபடுத்தினார்.
நேபாளத்தைச் சேர்ந்த மூன்று குருவானவர்கள் இலங்கைக்கு வருகை தந்து, இங்கு வைத்து ஆயர்களாக அபிஷேகம் செய்யப்பட்டுள்ளமையானது, தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை கிறிஸ்தவ சபை ஒரு முக்கிய ஆன்மீக மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளதைக் காட்டுகிறது.
இலங்கையின் ஆன்மீக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை எழுப்பியுள்ள இந்த நிகழ்வுகள், சர்வதேச மத நல்லிணக்கத்திற்கும், உலகளாவிய ஆன்மீகத் தொடர்பிற்கும், குறிப்பாக இலங்கை – நேபாள நாடுகளுக்கு இடையிலான ஆன்மீக உறவிற்கும் ஒரு பலமான அடித்தளமாக அமைந்துள்ளன.


