யாழ் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளில்  நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள்

Meiveli Media Team

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.  அந்நிலையில் குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொல்லியல் மற்றும் நிலவியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆய்வுகளின் போது, நிலத்தின் தன்மை, நிலத்தடியில் காணப்படும் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தொடர்பான தரவுகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

குறிப்பாக நல்லூர், நெடுந்தீவு மற்றும் காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான கள ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணப் பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பியர்களின் காலனித்துவ காலத்து எச்சங்கள், குறிப்பாக நெதர்லாந்து – டச்சு ஆட்சிக் காலத்துக் கோட்டைகள் மற்றும் தேவாலயங்களின் வரலாற்றுத் தொடர்புகளையும், அதற்கு முற்பட்ட காலத்து உள்நாட்டு வரலாற்றுச் சான்றுகளையும் கண்டறிவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இந்த விரிவான கள ஆய்வின் மூலம், வடக்கு மாகாணத்தின் தொல்லியல் பாரம்பரியம் மற்றும் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.