பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சொல்லிசைப் பாடகரான கணேஸ்குமார் சங்கீதன் என்பவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், பல தசாப்தங்களாக நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது பலத்த எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக மக்களுக்குத் தெளிவான வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கும் நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக இந்த அரசாங்கத்தின் கீழ் சுமார் 80 பேர் வரை இந்த மிலேச்சத்தனமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சாடினார். கடந்த காலங்களில் தெற்கில் உரிமைக்காகப் பேசிய சிங்கள மக்களுக்கும், வடக்கில் போராடிய தமிழ் மக்களுக்கும், கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது கிளிநொச்சியில் ஒரு பாடலைப் பாடினார் என்பதற்காக கலைஞர் சங்கீதன் கைது செய்யப்பட்டுள்ளமை பேச்சு சுதந்திரத்திற்கும் கலை சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும் என்றார்.
மேலும், அரசாங்கம் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை (PSTA) கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதை விடுத்து, உடனடியாக இந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அமைப்பாளர் வசந்த முதலிகே கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறியே சுரேஷ் சலே போன்றவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், அத்தகைய தீவிர சம்பவங்களுடன் சங்கீதன் போன்ற கலைஞர்களின் கைதை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது என்றார்.
இலங்கையின் சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சிறையறையின் கொள்ளளவை விட மூன்று மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டு, டின்மீன் டப்பாக்களைப் போல மிக மோசமான சூழலில் வாழ்கின்றனர் என்றும், சிறை அதிகாரிகள் கூட இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான கொடூரமான சூழலில், ஒரு பாடகர் தனது கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அவர், சிறைச்சாலைச் சுவர்களில் “கைதிகளும் மனிதர்களே” என்று எழுதப்பட்டிருந்தாலும் உள்ளே நடப்பது அதற்கு நேர்மாறானது எனவும், சுரேஷ் சலே போன்றோருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் சாதாரண கைதிகளுக்கு மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தற்காலிக பயங்கரவாதத் தடைச் சட்டம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தலின் போது இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக உறுதியளித்திருந்ததை நினைவுபடுத்திய அவர், வடக்கில் ஒரு இளம் கலைஞர் பாடினார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதும், எழுத்தாளர் தீபச்செல்வன் போன்றவர்களின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் இந்தச் சட்டத்தின் கொடூரத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு, கடந்த காலங்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற சட்டத்தரணிகளும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டனர் என்றும், இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் இதனைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் கூட இன்று இச்சட்டத்தை நீக்கக் கோரி வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டில் சாதாரண சட்டங்கள் இருக்கும் போது, இந்த விசேட ஒடுக்குமுறைச் சட்டம் இனிமேலும் தேவையில்லை என வலியுறுத்திய அவர், அரசாங்கம் உடனடியாக இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும், இல்லையெனில் இந்த அரசாங்கத்தைக் கொண்டுவந்த மக்கள் சக்தியே இதற்கு எதிராகப் போராட நேரிடும் என எச்சரித்தார்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “Repeal PTA! Withdraw PSTA!”, “பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்!” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமது எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்தனர்.


