சங்கீத்சன் விடுதலை செய்யப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

Meiveli Media Team


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக் கொண்ட பாடலைப் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான கணேஷ்குமார் சங்கீத்சன் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றால், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீண்டகாலமாக மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதாகவும், அதன் பரந்த மற்றும் தெளிவற்ற வரையறைகள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு முரணானவை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அச்சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி, அதை முற்றாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.