இணைய மோசடிக் கும்பல்களின் புதிய தளமாக இலங்கை மாறும் அபாயம்

Meiveli Media Team


கம்போடியாவில் இணைய மோசடிக் கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் பின்னணியில், சில குற்றவியல் வலையமைப்புகள் இலங்கையை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக சர்வதேச ஊடகமான ப்ளூம்பெர்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா இல்லாத பயண வசதி, தங்குமிடங்களின் கிடைக்கும்தன்மை, வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்பு மற்றும் முறைசாரா பணப் பரிமாற்ற அமைப்புகள் ஆகியவை இலங்கையை இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு கவர்ச்சிகரமான தளமாக மாற்றியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கை அதிகாரிகள் புதிய இணையக் குற்றப் பிரிவொன்றை அமைத்துள்ளனர். 2026ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்குக் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இணைய மோசடியில் ஈடுபட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொழும்பு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சீனாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து கம்போடியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, மோசடிக் கும்பல்கள் புதிய தளங்களைத் தேடி வருவதாகவும், இலங்கை அதில் முக்கிய இடமாக உருவெடுத்து வருவதாகவும் புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதேவேளை, மோசடி நடவடிக்கைகளின் பரவல் இலங்கை மட்டுமன்றி,  ஐக்கிய அரபு அமீரகம், திமோர்-லெஸ்டே, பிஜி மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பன்னாட்டு குற்றவியல் வலையமைப்புகளின் வளர்ச்சி குறித்து புதிய கவலைகளும் எழுந்துள்ளன.