சந்தேக நபரின் தராதரம் விசாரணைகளுக்கு தடையல்ல; குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் – அருட்தந்தை சிறில் காமினி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சந்தேக நபரின் தராதரம் விசாரணைகளுக்கு தடையல்ல; குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என
கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஒரு நபர் கடந்த காலத்தில் ஒரு போர் வீரராகவோ, இராணுவத்தின் முக்கிய அதிகாரியாகவோ அல்லது உளவுத்துறையின் தலைவராகவோ இருந்திருக்கலாம் என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக அவர் பல பங்களிப்புகளைச் செய்திருந்தாலும், அவர் ஒரு குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்படும் போது அவரது அந்தப் பழைய தராதரங்கள் அல்லது பதவிகளைக் காட்டி சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களின் நிலையை விளக்குவதற்காக ஒரு பொதுவான உதாரணத்தைக் குறிப்பிட்ட அருட்தந்தை, ஒருவருடைய பெற்றோர் படுகொலை செய்யப்படும்போது, அந்த கொலையைச் செய்தவர் ஒரு போர் வீரர் என்ற காரணத்திற்காக தங்களுக்கு நீதி வேண்டாம் என்று யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் எனக் கூறினார்.

எனவே, குற்றங்களை மூடிமறைக்க இவ்வாறான கடந்த கால பெருமைகளை வாதங்களாக முன்வைப்பது முற்றிலும் தர்க்கமற்றது மற்றும் அநீதியானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் முற்றிலும் குற்றவாளி என்று இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை என்றும், அவர் சான்றுகளின் அடிப்படையிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த முறையான விசாரணைச் செயல்முறைக்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் அல்லது தடைகளும் ஏற்படுத்தப்படக் கூடாது என வலியுறுத்தினார்.

எத்தகைய தராதரத்தைக் கொண்டவராக இருந்தாலும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுவதன் மூலமே சமூகத்தில் நீதியை நிலைநாட்ட முடியும் என்று அருட்தந்தை சிறில் காமினி ஊடகங்களுக்கு விளக்கினார்.