ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து மஹிந்த ராஜபக்ஷ அதிரடி கருத்து
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டம் இன்று (05) நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழல் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கட்சியின் உள்ளக கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சியில் தற்போதைக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகள் குறித்தே இன்றைய கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவரது தனிப்பட்ட கருத்து என்னவென்று கேட்கப்பட்டதற்கு, தான் அதை ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடியாக வீதிக்குச் சென்று மக்களிடமே அது குறித்துக் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
இதன் மூலம் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து மக்கள் மத்தியிலேயே உண்மையான அதிருப்தியும் கருத்தும் நிலவுகிறது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அரசியல் களத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பும், சஜித் பிரேமதாசவின் தரப்பும் வெவ்வேறு உத்திகளுடனும் புதிய “மூளைகளுடனும்” புதிய கூட்டணிகளை அமைப்பதற்கு தயாராகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்தத் தரப்பு எந்த உத்தியைப் பயன்படுத்தி புதிய கூட்டணிகளை அமைத்தாலும் அல்லது மாற்றங்களைச் செய்தாலும், அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
இறுதியாக, மக்கள் வாக்களிக்கும் போது எவற்றைக் கருத்தில் கொள்வார்கள் என்பது குறித்துப் பேசிய அவர், மக்கள் எப்போதும் நாட்டின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குவார்கள் என்றும், நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை சிந்திப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய நிகழ்கால சூழலையும் மிகத் தெளிவாகக் கருத்தில் கொண்டே மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்பதால், இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தேர்தல் காலத்தில் சரியான முடிவை எடுப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

