பௌத்த துறவிகள் அமைப்பிற்குள் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டம் தேவை: சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேரர்களுக்கு கடிதம்
Meiveli Media Team

பௌத்த சாசனத்தின் நீண்டகால இருப்பு என்பது தர்மம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்பதை வலியுறுத்தி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பௌத்த துறவிகள் அமைப்பிற்குள் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாசனத்திற்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட காலப்பகுதிகளில், மதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த செயல்முறைகள் மூலமே அவை தீர்க்கப்பட்டன என்பதை பௌத்த வரலாறு காட்டுகிறது. முதலாவது பௌத்த மாநாடு முதல் கண்டி யுகத்தில் வெலிவிட்ட ஸ்ரீசரணங்கர தேரரின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் வரை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இத்தகைய முயற்சிகளே பௌத்த மதத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதவியது. 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தின் போது பௌத்த மதத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து முழுமையடையாமல் போனது. மேலும், எனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது, மறைந்த மடிஹே பஞ்ஞாசீஹ மகாநாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழ், முழுமையான அரசாங்க ஆதரவுடன் பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பிக்குகள் சில பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் இரு சந்தர்ப்பங்களிலும், பௌத்த நிறுவனங்களுக்குள் நிலவும் தற்போதைய பிரச்சினைகளால் நன்மையடையும் குழுக்கள், அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகச் செயற்பட்டனர். இலங்கையில் பௌத்த மதம் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடிக்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பரந்த அளவிலான உள்நாட்டு கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கின்றோம். பௌத்த சாசனத்தைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தனித்தனியான சம்பவங்களில் மட்டும் கவனம் செலுத்துவதோ அல்லது அவை தொடர்பான பொதுமக்களின் விவாதங்களை முடக்க முயற்சிப்பதோ தீர்வாகாது. பௌத்த சாசனத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பௌத்த மாநாடு ஒன்றை ஆரம்பிப்பதில் மகாநாயக்க தேரர்கள் தலைமைத்துவத்தை ஏற்குமாறு வலியுறுத்துகின்றோம். இத்தகையதொரு முயற்சிக்குத் தேவையான ஒழுங்கமைப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக, சிரேஷ்ட பௌத்த தலைவர்கள் குழுவொன்றுடன் இணைந்து பணியாற்றத் நான் தயாராக இருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

