மஹிந்த, கோட்டாவின் உத்தரவுகளால் கடைசி நிமிடத்தில் புலிகளால் 300 படையினர் கொல்லப்பட்டனர்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

Meiveli Media Team

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் துரோகத்தனமான அரசியல் உத்தரவுகளைப் பிறப்பித்து, ஒரே நேரத்தில் முப்படைகளின் 300 வீரர்களின் உயிர்களைப் பறித்ததாக அப்போதைய இராணுவத் தளபதியாயிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’10 கேள்விகள்’ நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பல விடயங்களை வெளிப்படுத்தினார்.
2009இ ஜனவரி 28 அன்று, மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் முப்படைகளின் தளபதிகளுக்குத் தெரிவிக்காமல் போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும், அது ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆகிய திகதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். போர்நிறுத்தத்தின் முதல் நாளான, அதாவது 2009, ஜனவரி 31 இரவில், விடுதலைப் புலிகள் பாதுகாப்புப் படையினர்மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்து, சுமார் 300 வீரர்களைக் கொன்றதோடு, முன்னணி பாதுகாப்பு அரணையும் சுமார் 5 கிலோ மீற்றர் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினர் என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் உடனடியாக நடத்தப்பட்டிருக்க முடியாது என்றாலும், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே ராஜபக்ஷ சகோதரர்கள் விடுதலைப் புலிகளுக்கு போர்நிறுத்த உறுதிமொழியை அளித்திருந்தனர் என்பது தெளிவாகிறது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.