மத்திய கிழக்கு போர் காட்சிகளை முகநூலில் பகிர்ந்த 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்ப்னர்

Meiveli Media Team

மத்திய கிழக்கு போர் காட்சிகளை முகநூலில் பகிர்ந்த 7 இலங்கையர்கள் அபுதாபியிலிருந்து அதிரடி நாடுகடத்தல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள், அந்நாட்டிலிருந்து உத்தியோகபூர்வமாக நாடுகடத்தப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இக்குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் கொடூரமான போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைத் தங்களின் கைபேசிகளில் வைத்திருந்தமை, அவற்றுக்குச் சமூக வலைத்தளங்கள் ஊடாக ‘விருப்பம்’ தெரிவித்தமை மற்றும் ‘கருத்துக்களைப்’  பகிர்ந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அபுதாபி பாதுகாப்புப் படையினரால் இவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பலவந்தமாக நாடுகடத்தப்பட்டவர்கள் 23 முதல் 33 வயதுக்குட்பட்ட  இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் அம்பலாங்கொடை, மாரபன, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் என விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.நாடுகடத்தப்பட்ட சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உடனே, அங்கு தயாராகவிருந்த விமான நிலையக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுச் சேவை  அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக  அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.மத்திய கிழக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றதா மற்றும் இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்துப் பாதுகாப்புப் பிரிவினர் இவ்விளைஞர்களிடம் தற்பொழுது நீண்டநேர தீவிர விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.