மத்தல விமான நிலையத்தை 30 வருட குத்தகைக்கு விடுகிறது அரசாங்கம்: கைப்பற்ற போட்டி போடும் நாடுகள்
Meiveli Media Team

நீண்டகாலமாகத் தொடர்ச்சியான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஹம்பாந்தோட்டை – மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை 30 வருட காலப் பகுதிக்கு ‘ கட்டிடமைப்பு, இயக்கம் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை அடுத்து, ஆசியாவின் மூன்று பிரதான உத்திநோக்கு வல்லரசுகளுக்கு இடையே மத்தல விமான நிலையத்தைக் கைப்பற்றுவதற்கான கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டமாகக் கருதப்படும் இந்த சர்வதேச டெண்டர் நடைமுறைகளில் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தற்பொழுது நேரடியாகப் போட்டியிடுகின்றன.விமான நிலையத்தின் வருடாந்தப் பராமரிப்புக்காக மாத்திரம் அரசாங்கத்திற்கு ஏற்படும் சுமார் 3 பில்லியன் ரூபா நஷ்டத்தைத் தவிர்த்து, இப்பிராந்தியத்தை ஒரு சர்வதேச தளவாட , விமானப் பராமரிப்பு மற்றும் வான் போக்குவரத்து மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடையும் இந்த சர்வதேச டெண்டரின் கீழ், முதலீட்டாளர்களுக்கு இரண்டு பிரதான துறைகளில் ஏலங்களைக் கோருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது: விமான செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றையது தரைவழி வர்த்தக நடவடிக்கைகள் உத்தியோகபூர்வ விபரங்களின்படி, இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தரப்புகள் உள்ளிட்ட 47 தரப்பினர் இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மத்தல விமான நிலையத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதென்பது வெறும் வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கல்களையும் தாண்டி, இந்தியப் பெருங்கடலில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு புவிசார் அரசியல் போட்டியாக மாறியுள்ளது.

