தவெக அமைச்சரவையில் விசிக : திமுக எம்.பி. ஆ.ராசா பதிவு செய்த ருவீட் சர்ச்சை

Meiveli Media Team

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில் அதை விமர்சித்து திமுக எம்.பி. ஆ.ராசா பதிவு செய்த ட்வீட்கள் சர்ச்சையாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.
ஆரம்பத்தில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த நிலையில் தவெகவின், முதல்வர் விஜய்யின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தன. இதனையடுத்து, விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, இன்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில், தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக இடம்பெறுவது குறித்து ஆ.ராசாவின் கண்டன ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நேற்றிரவு 11.16 மணிக்கு ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்.
அதில் அவர்,
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே – என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த ட்வீட் பரவலாக கடும் கண்டனங்களை சம்பாதித்தது. பெண்களை அவமதிக்கும் வகையில் அவர் அவதூறு பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் பதிவை ஆ.ராசா நீக்கினார்.