“மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பையும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த நன்றிகெட்ட அரசாங்கமே ஏற்க வேண்டும்” – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர காட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

யுத்தக் காலத்தின் போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், அவர் அதற்கு பணியாது உறுதியாக நின்று யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த யுத்த வெற்றியின் முழுப் பொறுப்பும் கௌரவமும் முதன்மையாக அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவிற்கே சார வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்றபோது அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை நாம் கண்டோம். அந்த இடத்தில் எவ்விதமான ஒத்திகைகளும் நடத்தப்பட்டிருக்கவில்லை. அப்படியென்றால், விமல் வீரவன்சவிற்கு 5 நிமிடங்களுக்குள் மலரஞ்சலி செலுத்திவிட்டு வருவதற்கு அனுமதி வழங்கியிருக்கலாம். ஆனால், அதற்கு அனுமதி வழங்காத இந்த அரசாங்கத்தின் பொலிஸார், வெள்ளவத்தையில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு எவ்வித தடையும் இன்றி தாராளமாக அனுமதி வழங்குகின்றனர்.
இலங்கையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இந்தளவிற்கு நன்றிகெட்ட, குரூரமான மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்கு அஞ்சுகின்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததில்லை.
நேற்று முல்லைத்தீவு சம்பத்நுவர பகுதியில் எமது மாவீரர் (ரணவிரு) உபகார விழா ஒன்று நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டேன். அந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற பல இராணுவ வீரர்கள் பதக்கங்களை அணிந்துகொண்டும், உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள், மனைவிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆனால், எமது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு எந்தவொரு இராணுவ அதிகாரியும் கலந்துகொள்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. எந்தவொரு அரச அதிகாரியும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரவேற்பு இதுதான்.
இருப்பினும், இந்தச் சூழ்நிலையிலும் எவ்வித அச்சமுமின்றி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெலிஓயா தமிழ் பிரதேச செயலாளருக்கு எனது நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுத்தத்தை வென்ற எமது இராணுவ வீரர்களை கௌரவிப்பதற்காக முல்லைத்தீவில் நடத்தப்பட்ட எமது நிகழ்விற்கு இவ்வாறான தடைகளை விதித்த இந்த அரசாங்கம், முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. எமது கூட்டத்தைக் கண்காணிப்பதற்கு மாத்திரம் உளவுத்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும்; இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினை. இதனை ஒரு வேடிக்கையாகக் கருத முடியாது. பிரபாகரனையோ, தற்கொலைத் குண்டுதாரிகளையோ அல்லது எல்.டி.டி.ஈ. (LTTE) அமைப்பையோ மகிமைப்படுத்துவதன் மூலம், மற்றுமொரு பிரபாகரன் உருவாவதைத் தடுக்க முடியாது. இதன் காரணமாக மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி, ஒரு யுத்தம் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பையும் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட இந்த நன்றிகெட்ட அரசாங்கமே ஏற்க வேண்டும்.
அமெரிக்காவோ அல்லது பிரிட்டனோ ஒருபோதும் அல்-கொய்தா பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிப்பதில்லை. இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் ஜெர்மனியில் ஹிட்லரை நினைவுகூர இன்னும் அனுமதி இல்லை. அப்படியிருக்க, தமிழ் வாக்குகளை இலக்கு வைத்துச் செய்யப்படும் இந்த கீழ்த்தரமான செயலால், மீண்டும் எல்.டி.டி.ஈ அமைப்பு மகிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் ஹீரோக்களாக்கப்படுகிறார்கள். இது தமிழ் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் பயங்கரவாதம் தூண்டப்படுவதற்கே வழிவகுக்கும். இது எமது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் வேலைகளையே செய்து வருகிறது. தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் இராணுவ வீரர்களை ‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) என விளிப்பதில்லை. அது புலம்பெயர் அமைப்புகளை குஷிப்படுத்துவதற்காகவே ஆகும். அதேபோல், சுதந்திர தின அணிவகுப்பில் யுத்த வெற்றிக்காகப் பயன்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. அதுவும் அவர்களை திருப்திப்படுத்தவே.
மேலும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த எமது முப்படைத் தளபதி மஹிந்த ராஜபக்ஷவை முதலாவதாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இந்த அரசாங்கம் வெளியேற்றியது. அது செய்யக்கூடாத ஒரு காரியம். அதுமட்டுமன்றி, எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி இந்த மாதத்திலேயே அவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்தவே இவை செய்யப்பட்டன.
யுத்தக் காலத்தில் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருந்த சுரேஷ் சலே மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் சஹ்ரானுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதும், பிள்ளையான் கைது செய்யப்பட்டதும் இந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளை திருப்திப்படுத்தவே ஆகும். பிள்ளையான் எல்.டி.டி.ஈ அமைப்பில் இருந்து பிரிந்து எமது இராணுவத்திற்கு ஆதரவளித்தவர் என்பதால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். அதேபோல் பாதுகாப்புப் படை அதிகாரியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இவையனைத்தும் பயங்கரவாதிகளை திருப்திப்படுத்தவே செய்யப்பட்டன. தற்போது பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சோகமான, துரதிர்ஷ்டவசமான நிலைமை எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இருந்ததில்லை.
எமது இராணுவ வீரர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் புரிந்தார்கள். கோனகல கிராமத்தில் கர்ப்பிணித் தாயின் வயிற்றைக் கீறி, குழந்தையை வெளியே எடுத்து மீன் வெட்டுவது போல் வெட்டியதை நாம் பார்த்திருக்கிறோம். அரந்தலாவையில் 37 இளம் சாம்பேர தேரர்களை வெட்டிப் படுகொலை செய்தார்கள். காத்தான்குடியில் முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருந்த போது 300க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றார்கள். இத்தகைய கொடூர பயங்கரவாதிகளுக்கு எதிராகவே எமது வீரர்கள் போரிட்டார்கள்.
அந்த யுத்தத்திற்கு அரசியல் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷவே வழங்கினார். யுத்தத்தின் போது பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், அமெரிக்க தூதுவரும் இணைந்து யுத்தத்தை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுத்தனர். அவர் பயந்து யுத்தத்தை நிறுத்தியிருந்தால், இன்று ஈழம் உருவாவதைத் தடுத்திருக்க முடியாது. அதனால்தான் யுத்த வெற்றியின் முழு கௌரவமும் அவருக்கே உரித்தாக வேண்டும். அவர் யுத்தத்தின் பின்னர் வடக்கை முழுமையாக அபிவிருத்தி செய்தார். பாலங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், காப்பட் வீதிகள், பாடசாலைகளை அமைத்தார். வடக்கின் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, வடக்கில் முழுமையான அமைதியை நிலைநாட்டினார்.
மறுபுறம், தென்னிந்தியாவில் நடிகர் விஜய் தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நாளாக’ பிரகடனப்படுத்துமாறு அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். கஜேந்திரகுமாரிற்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், தமிழினப் படுகொலையைத் தடுத்ததே நாங்கள்தான். யுத்தத்தின் இறுதிப் பகுதியில் பிரபாகரன் சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். எமது இராணுவத்தினர் 2 லட்சத்து 95 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றியே இந்த யுத்தத்தை வென்றனர். உலகில் எந்தவொரு இராணுவமும் இத்தனைப் பிணையாளர்களைக் காப்பாற்றி யுத்தத்தை வென்ற சரித்திரம் இல்லை. இதற்காக எமது இராணுவத்தை கௌரவிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் நான் கேட்கிறேன்; அன்று 2 லட்சத்து 95 ஆயிரம் மக்களை நாம் மீள்குடியேற்றம் செய்தபோது, அங்குள்ள ஒரு குழந்தைக்கு யோகட் கப் ஒன்றையாவது கொடுக்க இவர்களில் யாராவது வந்தார்களா? 4 லட்சத்து 95 ஆயிரம் கண்ணிவெடிகளை எமது வீரர்கள் அகற்றிய போது, அவர்களுக்கு ஒரு தேநீராவது கொடுக்க இந்த தமிழ் அரசியல்வாதிகள் வந்தார்களா? எமது பணத்தில் தமிழ் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தபோது, ஒரு ஓட்டையாவது கொடுக்க இவர்கள் வரவில்லை. எனவே, தமிழ் மக்களின் உரிமைகள் குறித்தோ, நலன்கள் குறித்தோ பேச இவர்களுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை. இன்றும்கூட வடக்கில் மக்களுக்கு இரத்தம் தேவைப்படும் போது இராணுவத்தினரே இரத்தம் வழங்குகின்றனர்.
இவ்வாறான மிக ஆபத்தான, கீழ்த்தரமான குணங்களைக் கொண்ட அரசியல்வாதிகளே மக்களைத் தூண்டிவிட்டு பயங்கரவாதிகளை நினைவுகூர முற்படுகின்றனர். இதற்கு இந்த அரசாங்கம் இடமளிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதன் மூலம் மீண்டும் ஒரு பயங்கரவாதமும், தீவிரவாதமும் உருவாகி நாடு சீரழிந்து போகும். அதன் முழுப் பொறுப்பையும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்” என்றார்.

