போதைப்பொருள் ஒழிப்பு கூட்டுப் பொறுப்பாகும்: மட்டக்களப்பில் தேசிய மெகா வேலைத்திட்டம் ஆரம்பம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய நடவடிக்கையின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு பற்றி விசேட கருத்துரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம்,
நச்சுப் போதைப்பொருள் விவகாரமானது நாட்டில் தற்போது மிக அவசரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என எச்சரித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர் சமுதாயமும், பள்ளி மாணவர்களும் இலக்கு வைக்கப்பட்டு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது தற்போதைய சமூகத்தின் பெரும் கவலையாக மாறியுள்ளதுடன், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுடன் நாளாந்தம் வைத்தியசாலைகளை நாடிவரும் இளைஞர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 12,000க்கும் மேற்பட்ட நச்சுப் போதைப்பொருள் தொடர்பான கைதுகள் பதிவாகியுள்ளதுடன், இலங்கையில் கஞ்சா மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களே அதிகளவில் கைப்பற்றப்பட்ட நச்சுப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் பாவனையானது தனிமனித உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் நில்லாது, நிதி இழப்பு, வேலைவாய்ப்புகளை இழத்தல், குடும்ப வன்முறைகள், தற்கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு என சமூகத்தில் பரந்தளவிலான நச்சு விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்ந்து சிறப்பான மருத்துவ சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதுடன், போதைக்கு அடிமையானவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல் முறையான புனர்வாழ்வு மூலம் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட்டு வருவதாகவும், இந்த போதைப்பொருள் பாவனையை நாம் முழுமையாக ஒழித்தால், இதற்காக செலவிடப்படும் பாரிய நிதியை தொற்றா நோய்கள் உள்ளிட்ட பிற முக்கிய சுகாதார சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
குடும்பங்களைச் சிதைத்து, சமூகத்தைச் சீரழிக்கும் இந்த அரக்கனிடமிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற போதிலும், அதிகாரிகளால் மட்டும் இதனைத் தனித்துச் செய்ய முடியாது என அவர் வலியுறுத்தினார்.
மாவட்ட மட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் பிரிவினர், கல்வி அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, கிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது முழுமையான ஆதரவை வழங்கி, “முழு நாடும் ஒன்றாக” அணிதிரண்டுள்ள இந்த தேசிய செயல்பாட்டிற்கு கைகொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

